Saturday 15 June 2013

நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டை நகர்த்தி வைத்து சாகசம்


கோவை: புதிய வீடு கட்டுவதற்காக, பாரம்பரிய வீட்டை இடிக்காமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக 35 அடி தூரம் காலி இடத்துக்கு  நகர்த்தப்பட்டது.

கோவை சாயிபாபாகாலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் ரியல்எஸ்டேட் உரிமையாளர் தங்கவேல் என்பவரின் வீடு உள்ளது. இவரது தந்தை வக்கீல் ஆறுச்சாமி  30 ஆண்டுகளுக்கு முன்பு 2,400 சதுர அடியில் முதல் தளத்துடன் வீடு கட்டினார். தங்கவேலு தற்போது அந்த இடத்தில் புதிய வீடு கட்ட முடிவுசெய்தார். ஆனால், பழைய வீட்டை இடிக்க மனமில்லை. அதனால், வீட்டை அப்படியே நகர்த் தும் தொழில்நுட்பம் பற்றி அறிந்து அரியானாவை சேர்ந்த டி.டி.பி.டி. இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தை தொடர்புகொண்டார். அந்நிறுவன நிர்வாக இயக்குனர் சுஷில் சிஷோடியா தலைமையில்20 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். 
வீட்டை 50 அடிக்கு பக்கவாட்டில் நகர்த்த 2  மாதங்களுக்கு முன்பு பணியை துவக்கினர். வீட்டை சுற்றி நான்குபுறமும் பூமிக்குள் துளை போட்டு, அஸ்திவாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், ஜாக்கிகள்  உதவியுடன் வீடு ஒன்றரை அடி உயரத்துக்கு தூக்கப்பட்டது. பின்னர், அதன்கீழ் இரும்பு ரோலர்கள் பொருத்தப்பட்டு, வீட்டை அணு அணுவாக நகர்த்தும் பணி துவங்கியது. இதற்காக, மொத்தம் 300 ஜாக்கிகள், 300 ரோலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, பக்க வாட்டில் உள்ள காலி இடத்தில் அஸ்திவாரம் போடப்பட்டு தயார் நிலையில் ஒன்றரை அடி மேலே உயர்த்தி வைக்கப்பட்டது. அந்த  அஸ்திவாரத்தை நோக்கி வீடு படிப்படியாக நகர்த்தப்படுகிறது. கடந்த 20 நாளில் 35 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது
இன்னும், 15 அடி தூரம் நகர்த்தப்பட  வேண்டியுள்ளது. முழுமையாக நகர்த்தி முடிக்கப்பட்ட பிறகு தரை தளத்தில் சில வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. அடுத்து, செப்டிங் டேங்க் இணைப்பு கொடுக்கப்பட  வேண்டும். இவை இரண்டையும் செய்துமுடித்தால் மீண்டும் அந்த வீட்டில் எப்போதும்போல் குடியிருக்கலாம். தேவைப்பட்டால் இன்னொரு மாடிகூட மேலே  கட்டலாம் என்கிறார்கள் பொறியாளர்கள். இந்தியாவிலேயே முதன் முறை: இதுபற்றி, டிடிபிடி நிர்வாக இயக்குனர் சுஷில்கிசோடியா கூறியதாவது: இதுவரை எங்கள் நிறுவனம் சார்பில் தரைதளம் அளவு  உள்ள வீடு மட்டும் நகர்த்தியுள்ளோம். அதிகபட்சமாக 150 டன் எடையுள்ள வீட்டை மட்டும்தான் நகர்த்தியுள்ளோம். 
தற்போது, இந்தியாவிலேயே முதன் முறையாக முதல்தளத்துடன் கூடிய, 400 டன் எடை கொண்ட வீட்டை நகர்த்தி உள்ளோம். ஒயரிங், பிளம்பிங், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் என எதையும்  தொடவில்லை. செப்டிக் டேங்க் இணைப்பு மட்டும்தான் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மீதமுள்ள தூரத்துக்கு நகர்த்தி விடுவோம். ஒரு சதுரடி  கட்டிடத்தை ஒரு மீட்டர் நீளத்துக்கு நகர்த்த 300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். வீட்டு உரிமையாளர் தங்கவேலின், தந்தை வக்கீல் ஆறுச்சாமி கூறுகை யில், வீட்டை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக கட்டினால் 80 லட்சம் ரூபாய்  செலவாகும். ஆனால், இதை நகர்த்த 18 லட்சம் முதல் 20 லட்சம் வரைதான் செலவாகிறது என்றனர்.

Download As PDF